உங்கள் முதுகலைப் பட்டப்படிப்பு பணி அனுமதி (Post-Graduation Work Permit (PGWP), காலாவதியான பின்னரும், நீங்கள் கனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான பல வழிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
முதுகலைப் பட்டப்படிப்பு பணி அனுமதி (PGWP) என்பது, ஒரு முறை பயன்பாட்டுக்கு மட்டுமே, அதை நீட்டிக்க இயலாது. பொதுவாக, அது ஒருவரது கல்வித்திட்டக் காலகட்டம் வரை மட்டுமே நீடிக்கும்.
இந்த கட்டுரையின் நோக்கமானது, நீங்கள் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு என்ன வழியைப் பின்பற்றவேண்டும் என்று காட்டுவது அல்ல. அதற்கு எளிதான வழி கிடையாது. ஆனால், உங்கள் உங்கள் முதுகலைப் பட்டப்படிப்பு பணி அனுமதி முடிந்த பின்பும், நீங்கள் தொடர்ந்து கனடாவில் வாழ விரும்பினால், அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதைக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம் ஆகும்.
சில குறிப்பிட்ட புலம்பெயர்தல் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, Bridging Open Work Permit (BOWP) என்னும் உரிமம் பெற உங்களைத் தகுதியுள்ளவராக்கும். BOWP உரிமம், முதுகலைப் பட்டப்படிப்பு பணி அனுமதி காலாவதியான நிலையிலும், நிரந்தர வாழிட உரிமத்திற்கான ஒப்புதல் கிடைக்கும் வரை கனடாவில் தொடர்ந்து பணி செய்ய உங்களை அனுமதிக்கும்.
எக்ஸ்பிரஸ் எண்ட்ரி என்பது ஒரு புலம்பெயர்தல் திட்டம் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், அது மூன்று பெடரல் புலம்பெயர்தல் திட்டங்களுக்கும், சில மாகாண நாமினி திட்டங்களுக்கும் (PNPs) விண்ணப்பிக்கும் மேலாண்மை அமைப்பு ஆகும்.
அந்த மூன்று பெடரல் புலம்பெயர்தல் திட்டங்கள் என்னவென்றால்,
நீங்கள் எக்ஸ்பிரஸ் எண்ட்ரி திட்டம் மூலம் புலம்பெயரவேண்டுமானால், நீங்கள் முதலாவது இந்த திட்டங்களில் ஒன்றிற்குத் தகுதிபெறவேண்டும். நீங்கள் புலம்பெயர தகுதியுடையவர்களில் ஒருவரான பிறகு, கல்வி, மொழிப்புலமை, கனேடிய பணி அனுபவம் முதலான சில காரணிகளின் அடிப்படையில் Comprehensive Ranking System CRS) என்ற திட்டத்தின்கீழ் உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்
இன்னொரு விடயம், உங்களுக்குக் கனடா புலம்பெயர்தல் துறை, அதாவது, புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிலிருந்து விண்ணப்பிக்குமாறு அழைப்பு (Invitation to Apply ITA) வந்த பிறகே நீங்கள் புலம்பெயர்தலுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
அந்த அழைப்பைப் பெறுவதற்கு, நீங்கள் குறிப்பிட்ட அளவிலான CRS புள்ளிகளாவது பெற்றிருக்கவேண்டும். அப்படி அதிக அளவு புள்ளிகள் பெற்றிருப்போர், இரண்டு வாரங்களுக்கொருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுவார்கள்.
மாகாண நாமினி திட்டங்கள் (Provincial Nominee Programs, PNPs) பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களால் நடத்தப்படுகின்றன.
மாகாண நாமினி திட்டங்களில் இரண்டு பிரதான வகைகள் உள்ளன. ஒன்று, Enhanced PNP மற்றொன்று base PNP. Enhanced PNP திட்டங்கள், எக்ஸ்பிரஸ் எண்ட்ரி வாயிலாக புலம்பெயர் விண்ணப்பிக்க விரும்புவோரிலிருந்து மக்களை தேர்வு செய்கின்றன. எக்ஸ்பிரஸ் எண்ட்ரிக்கு தகுதி பெறாதவர்கள், base PNP வாயிலாக கனடாவுக்கு புலம்பெயரலாம்.
இந்த base PNPயைப் பொருத்தவரை, உங்களுக்கு கனேடிய மாகாண பணி அனுபவம் தேவை என்ற அவசியம் இல்லை. அப்படியே இருந்தால் அது ப்ளஸ் பாயிண்ட்தான். நீங்கள் என்ன பணி செய்ய தகுதியுடையவர், எந்த மாகாணத்தில் குடியமர விரும்புகிறீர்கள் என்பது போன்ற விடயங்களின் அடிப்படையில் நீங்கள் மாகாண நாமினி திட்டத்தை தேர்வுசெய்துகொள்ளலாம்.
கியூபெக்குக்கு புலம்பெயர்வதற்கு வேறு வகையான திட்டம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் கணவர் அல்லது மனைவி, அல்லது உங்களுடன் இணைந்து வாழும் துணைவர் ஒரு கனேடிய குடிமகனாகவோ அல்லது கனேடிய நிரந்தர வாழிட உரிமம் பெற்றவராகவோ இருக்கும்பட்சத்தில், அவர் நீங்கள் கனடா வருவதற்கு உங்களை ஸ்பான்சர் செய்யலாம்.
மேலே குறிப்பிட்ட எதுவும் உங்களுக்கு கைகொடுக்கவில்லையென்றால், வேறொரு பணி உரிமத்தின்கீழ் நீங்கள் கனடாவில் தொடர்ந்து வாழ உங்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன.
கனடாவில் பணி உரிமம் பெறுவதற்கு, உங்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர் உங்களை மதிப்பீடு செய்யும் ஒரு விடயம் நடைமுறையில் உள்ளது. அது பணிச் சந்தை தாக்க மதிப்பீடு (Labour Market Impact Assessment, LMIA) என அழைக்கப்படுகிறது. இது பொதுவாக நீண்ட ஒரு செயல்முறையாகும், அதற்கு கட்டணமும் உண்டு.