மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 274 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், செங்கலடி, வெல்லாவெளி, வாழசை;சேனை, வவுணதீவு, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவகளில் தலா ஒருவர் வீதம் 7 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் 211 பேராக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இருந்து எழுமாறாக எடுக்கப்பட்ட 3 பேரின் பிசிஆர் பரிசோதனையின் மாதிரிகள் கொழும்பு ஜெயவர்தன பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து இதில் இருவருக்கு டெல்டா வைரஸ்சும். ஒருவருக்கு அல்பா வைரஸ்சும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் டெல்டா வைரஸ் தொற்று பரவியிருக்கின்றதுடன் ஒருவாரத்தில் 1982 கொரோன தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் 300 தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
அத்துடன் 5 க்கு மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அப்போது தான் தொற்றை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரமுடியும் எனவும் அறிவுறுத்தினார்.