இங்கிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் குரூப் 12 சுற்றில் தமது பிரிவில் முதல் இடத்தை பிடித்தபோதும் டி20 உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வியடைந்துள்ளது.
மூன்று பந்துகளில் மூன்று மிரட்டல் சிக்ஸர்களை விளாசி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும், கோப்பை வெல்லும் கனவையும் தவிடுபொடியாக்கியது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது அரை இறுதிப்போட்டி கிட்டதட்ட நியூசிலாந்து – இங்கிலாந்து போட்டியை நினைவுபடுத்துவதாகவே அமைந்தது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் இரு அணிகளும் டாஸில் தோற்றன. சேஸிங்கின் போது ஆட்டத்தின் 15 – 16ஆவது ஓவர் வரை ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இரு அணிகளும் 19வது ஓவரின் கடைசி பந்தில் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தன. இரு அணிகளுமே ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தன.
அது போக மற்ற இரு சுவாரசிய புள்ளிவிவரம் என்னவென்றால் ஆஸ்திரேலியா இதுவரை உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை, அதே போல ஐக்கிய அரபு எமிரேட்டில் 16 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வலம்வந்தது பாகிஸ்தான். இந்த இரு சாதனைகளில் எதாவது ஒன்று முறியடிக்கப்படும் என்பதால் இரண்டாவது அரை இறுதி போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணி பாகிஸ்தான் அணிதான் என்பதும் நினைவுகூரத்தக்கது. இத்தகைய சூழலில், துபாய் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு ரிஸ்வான் – பாபர் இணை 71 ரன்களைக் குவித்தது. பவர்பிளேவில் விக்கெட்டை இழக்கவில்லை, நடுவரிசை ஓவர்களில் ரன்குவிப்பில் தேக்கமில்லை, இறுதி ஓவர்களில் ஃபகர் ஜமான் ரசிகர்களை குதூகலிக்க வைக்க தவறவில்லை. இரு பேட்ஸ்மேன்கள் அரை சதம் விளாசினர். ஃபகர் 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், மூன்று பௌண்டரிகளை விளாசி 55 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு 177 ரன்கள் எனும் வலுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சேஸிங்கின் போது, முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஃபின்ச்சை டக் அவுட் ஆக்கினார் ஷாஹீன் அஃப்ரிடி.
நடுவரிசை ஓவர்களில் ரன்களை ஓரளவு கட்டுப்படுத்தியதோடு சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தார். டேவிட் வார்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் என ஆஸ்திரேலியாவின் பேட்டிங் படையை மொத்தமாக காலி செய்தார்.
இப்படி பாகிஸ்தான் அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. ஆனால் எல்லாம் 15வது ஓவருக்கு பிறகு மாறியது.
அப்போது ஆஸ்திரேலியாவுக்கு 30 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது இலக்கு. கைவசம் ஐந்து விக்கெட்டுகள் தான். ஒரு விக்கெட் விழுந்தால் கூட சிக்கல் எனும் நிலைமை. விக்கெட் கீப்பர் மாத்யூ வேட் மற்றும் ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் களத்தில் இருந்தனர்.
நான்கே ஓவர்களில் அந்த 62 ரன்களை எடுத்து மிரட்டல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. அது எப்படி?
ஆட்டத்தின் 16வது ஓவரை வீசிய ஹசன் அலி, ஒரு நோ பால் வீசியது உட்பட 12 ரன்கள் கொடுத்தார். ஹாரிஸ் ராஃப் வீசிய 17ஆவது ஓவரில் 13 ரன்களை பறிபோயின. 17ஆவது ஓவரை ஹாரிஸ் ராஃப் வீசினார், ஒரு சிக்ஸர் ஒரு பெளண்டரி உட்பட 13 ரன்கள்.
அதுவரை மாத்யூ வேட் 9 பந்துகளில் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆட்டத்தின் 18வது ஓவரை ஹசன் அலி கையில் கொடுத்தார் பாகிஸ்தான் கேப்டன். அவரது ஓவரில் வேட் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடிக்க ஆஸ்திரேலியா 15 ரன்களை குவித்து வெற்றி வாய்ப்பை அதிகரித்தது.
கடைசி இரு ஓவர்களில் 22 ரன்கள் இலக்கு. அதுவரை அபாரமாக பந்து வீசி மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த ஷாஹீனை அழைத்தார் பாபர்.
முதல் பந்தை எதிர்கொண்டார் ஸ்டாய்னிஸ் – ரன் இல்லை. இரண்டாவது பந்தில் பை மூலம் ஒரு ரன். இப்போது மாத்யூ வேட் ஸ்ட்ரைக்குக்கு வந்தார். 10 பந்துகளில் 21 ரன்கள் என்பது இலக்கு. மூன்றாவது பந்தை வைட் வீசினார் ஷாஹீன். ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு ரன் கிடைத்தது.
மீண்டும் மூன்றாவது பந்தை விளாசினார் வேட். அந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் நழுவவிட்டார் ஹசன் அலி. அது பாகிஸ்தான் அணிக்கு பேரிடியாக அமைந்தது.
நான்காவது பந்தை ஸ்கூப் ஷாட் மூலம் ஒரு சிக்ஸ், ஐந்தாவது பந்தை 96 மீட்டர் நீளத்தில் ஒரு மெகா சிக்ஸர், ஆறாவது பந்தை மீண்டும் ஸ்கூப் ஷாட் மூலம் ஃபைன் லெக் திசை மேல் இரு சிக்ஸர் என மிரட்டல் ஆட்டம் ஆடினார் மாத்யூ வேட்.
மூன்றே பந்தில் ஆட்டம் முடிந்தது. தனது கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் கொடுத்தார் ஷாஹீன்.
முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங்கின்போது, மொஹம்மது ரிஸ்வான் நேற்று ஆடிய ஆட்டத்தை கிரிக்கெட் நிபுணர்கள் புகழந்து தள்ளினர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் ரிஸ்வானை ஒரு போராளி என குறிப்பிட்டார். ஏனெனில் போட்டி நாளுக்கு முந்தைய இரவு நுரையீரல் பிரச்சனையால் அவர் மருத்துவமனையில் இருந்ததாக ஹைடன் குறிப்பிட்டார்.
முகமது ரிஸ்வானின் அபாரமான ஆட்டம், ஃபகர் ஜமானின் அதிரடி சரவெடி ஆட்டம், ஷாஹீன் வீசிய திரில்லிங்கான ஓபனிங் ஸ்பெல், சூழல் வலையில் ஆஸ்திரேலியாவை திணறடித்த ஷதாப், அணியை முன்னின்று வழிநடத்திய பாபர் ஆசம் என அத்தனை பேரின் உழைப்பும், பாகிஸ்தான் அணியின் கோப்பை கனவும் சில பந்துகளில் சுக்கு நூறானது.
ஆஸ்திரேலியா, கோப்பைக்கான பந்தயத்தில் நுழைந்தது எப்படி?
ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு வந்தது பலருக்கும் ஆச்சர்யமானதாக அமைந்திருக்கக்கூடும். முன்னதாக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு நிபுணர்கள் முன்னுரிமை தரவில்லை.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய ஐந்து டி20 தொடர்களில் ஐந்திலும் தோற்றது. இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்துடன் தொடரை இழந்தது.
வங்கதேச அணியுடனான தொடரில் 62 ரன்களுக்கு ஆல் அவுட். தொடரை 1 – 4 என படுமோசமாக தோல்வியை சந்தித்தது. உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்திடம் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மட்டுமல்லாமல் 12ஆவது ஓவரிலேயே தோற்றது.
இத்தனை படுதோல்விகளுக்கு பிறகு சுதாரித்து வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளை அபாரமாக வென்று, ரன்ரேட் மூலம் தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றி அரை இறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா.
இந்த போட்டியிலும் கடைசி நேர சரவெடி ஆட்டம் மூலம் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. சூழலுக்கு சாதகமான மைதானங்கள் என கருதப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்டில் டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்துக்கு ஒரு ஆசிய அணி கூட தகுதிபெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு இரவு நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.
முன்னதாக 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.
2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தன்னை தோற்கடித்த இங்கிலாந்தை, இம்முறை அரைஇறுதியோடு வெளியேற்றியது நியூசிலாந்து. அதேபோல 2015 ஆஸ்திரேலியாவுடனான தோல்விக்கு நியூசிலாந்து பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஐசிசி தொடர்களில் இன்னமும் டி20 உலகக் கோப்பையை வெல்லாத குறை ஆஸ்திரேலியாவுக்கு இருக்கிறது. நியூசிலாந்தோ முதன்முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. புதிய சாம்பியன் யார் என்பதற்கான கேள்விக்கு வரும் ஞாயிறு இரவு விடை தெரியும்.
THX-BBC