தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கிய சாட்சியங்கள், வாக்கு மூலங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) இன்று சிறையிலிருந்திருப்பார் என சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக (Shehan Malaka) தெரிவித்துள்ளார்.
அருட் தந்தை சிறில் காமினி விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அமைச்சர் சரத் வீரசேகர உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டியவர். அதற்கான சாட்சியங்களை தான் குற்றப் புலனய்வுத் திணைக்களத்திடம் வழங்கியுள்ளேன்.
அனைவருக்கும் ஒரே சமனாக சட்டம் அமுல் செய்யப்பட வேண்டும் என்பதேயே தான் நியாயத்தை நிலைநாட்டும் நிறுவனங்களிடம் விடுக்கும் கோரிக்கை. தற்போது சிவில் சமூகம் விழித்துக்கொண்டுள்ளது. இளைஞர்கள் எழுந்துவிட்டனர்.
தமது ஊடக அதிகாரம், இராணுவ அதிகாரத்தைக் கொண்டு அனைத்தையும் மறைக்க முடியும் என எவரேனும் நினைத்தால், அது சாத்தியமற்றது. அன்று கூறியதைப் போலவே இன்றும் கூறுகின்றேன். நாம் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவோம்.
சுரேஷ் சாலேவுக்கோ இந் நாட்டு உளவுப் பிரிவுக்கோ எம்மை கீழ்படிய வைக்க முடியாது. இராணுவம் மொஹிதீன், காவல்துறை பாயிஸ், மொஹம்மட் நியாஸ் ஆகியோரைப் போன்றே சஹ்ரானின் மைத்துனர் அன்சார் தொடர்பிலும் அரச தலைவர்ஆணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் யார்? இவர்கள் உளவுத் துறை உறுப்பினர்கள் இல்லையா? உளவுத் துறையுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருந்ததா இல்லையா? இவர்கள் உளவுத் துறைக்கு தகவல் அளிப்போராக இருந்தார்களா இல்லையா?’
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா அளித்த சாட்சியின் ஒலிப்பதிவொன்று தற்போது வத்திகானுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்கத்திடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
IBC