திருகோணமலையில் பிரசவித்து 6 நாட்களில் தாயாரால் கைவிடப்பட்ட சிசுவுக்கு தற்போது 11 மாதங்கள் ஆகும் நிலையில், கந்தளாய் வைத்தியசாலை தாதியர்களால் குறித்த குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த இளம் தாயொருவர் குழந்தையை கைவிட்டு தலைமறைவாகியிருந்தார். குழந்தை பிரசவித்து 6 நாட்களில் தாயாரால் கைவிடப்பட்டிருந்தது.
குழந்தை தற்போது திருகோணமலை சிறுவர் காப்பமொன்றில் தங்கியுள்ள நிலையில் 10 நாட்களின் முன்னர் குழந்தை சுகவீனமடைந்த நிலையில், அன்ரிஜன் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் கொரொனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தை பிறந்து நேற்று முன்தினம் (13) 11 மாதங்கள் நிறைவடைகின்றபோதும், குழந்தைக்கு இதுவரை காது குத்து நடத்தப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து, மருத்துவமனையின் 7ஆம் இலக்க விடுதியின் தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து குழந்தையின் காது குத்து நிகழ்வை மருத்துவமனையின் விடுதியில் எளிமையாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் தாதியர்களின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.