துபாய் மண்ணில் வாணவேடிக்கை சூழ் மைதானத்தின் நடுவில், பார்ட்டி பாப்பர்ஸ் வெடித்துச் சிதற, ஷாம்பெய்னை வார்னர் உள்ளிட்ட வீரர்கள் பீய்ச்சி அடிக்க, மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு நடுவே ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் ஃபின்ச் கோப்பையை தூக்கியபோது அவரது கால் தரையில் இல்லை.
2015 மார்ச் 29க்கு பிறகு, நான்கு ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டி வரை கூட வராத ஆஸ்திரேலிய அணி இந்த முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
அதிக முறை உலகக்கோப்பையை வென்ற அணி, ஹாட்ரிக் உலகக்கோப்பையை அடித்த அணி, தொடர்ந்து இரு முறை சாம்பியன்ஸ் டிராஃபி வென்ற அணி என எத்தனையோ சாதனைகளை, யாராலும் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகளை ஆஸ்திரேலியா படைத்திருந்தாலும் டி20 உலகக் கோப்பையை வெல்லவேண்டும் எனும் கனவு மட்டும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் நனவாகிவிடவில்லை.
கிட்டத்தட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதோ இப்போது அந்த கனவு ஆஸ்திரேலியாவுக்கு நனவாகி இருக்கிறது.
ஆனால், மறுமுனையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்தித்த நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட நாக் அவுட் போட்டிகளில் வெல்லாத அணியாகிவிட்டது நியூசிலாந்து.
எட்டு விக்கெட் வித்தியாசத்தில், ஏழு பந்துக்கு முன்னரே இலக்கை கடந்து தனது முதல் டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன்னர் ஐந்து தொடர்களில் தோல்வி, குறிப்பாக வங்கதேசத்திடம் 1 – 4 என படுதோல்வி, உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி, சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்திடம் மரண அடி, அணிசேர்க்கை, வீரர்கள் களமிறங்கும் நிலை என ஏகப்பட்ட விமர்சனங்களை தாண்டி, ரன்ரேட் புண்ணியத்தில் தப்பிப்பிழைத்து கடந்த நவம்பர் 6ம் தேதி அரைஇறுதிக்கு தகுதிப் பெற்ற ஆஸ்திரேலிய அணி, இதோ நவம்பர் 14-ம் தேதி நள்ளிரவு நெருங்கும் வேளையில் சாம்பியன் ஆகிவிட்டது.
2015 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2019 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தொடர்ந்து மீண்டுமுறை ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில், தொட்டுவிடும் தொலைவில் கோப்பை இருந்தபோதும் நியூசிலாந்தால் எட்டிப்பிடிக்க இயலவில்லை.
துபாய் மண்ணில், டாஸ் போட்டியின் முடிவில் அதிமுக்கிய பங்காற்றும் என்பது நிபுணர்களின் கருத்து.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் இந்த மண்ணில் முதலில் பேட்டிங் செய்து வென்றது. அதன்பின்னர் இந்த மண்ணில் நடந்த சர்வதேச போட்டிகளில் இலக்கை கட்டிக்காப்பதில் அத்தனை அணிகளுமே திணறின.
நியூசிலாந்தும் சரி, ஆஸ்திரேலியாவும் சரி இரு அணிகளுமே குரூப் 12 சுற்றில் இரண்டாமிடம் பிடித்திருந்தன. நியூசிலாந்தை குரூப் 12-ல் தோற்கடித்த பாகிஸ்தானை ஆஸ்திரேலியா அரை இறுதியில் வென்றது. ஆஸ்திரேலியாவை குரூப் 12-ல் நசுக்கிய இங்கிலாந்தை அரைஇறுதியோடு விமானம் ஏற்றிவிட்டது நியூசிலாந்து.
நியூசிலாந்து & ஆஸ்திரேலியா அரைஇறுதியில் சேஸிங்கில்தான் ஜொலித்தன. ஆகையால் இந்தமுறை சேசிங் செய்யும் வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள டாஸ் போடும் நிகழ்வே எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியது.
டாஸ் வென்றார் ஃபின்ச். அரை இறுதியில் விளையாடிய அதே அணியே களமிறங்கும். சேஸிங்கை தேர்ந்தெடுக்கிறோம் என்றார்.
நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் கான்வாய்க்கு பதிலாக செய்ஃபர்ட் களமிறங்குவதாக அறிவித்தார். டேவிட் கான்வாய் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் மற்றும் இரண்டாவது ஓவர்களில் ஸ்டார்க்கையும், ஹேசில்வுட்டையும் கவனமாக எதிர்கொண்ட நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் தலா ஒரு பௌண்டரி அடித்தார். மூன்றாவது ஓவரையே பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் மேக்ஸ்வெல்லிடம் ஒப்படைத்தார் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஃபின்ச். மேக்ஸியை சிக்ஸர் அடித்து வரவேற்றார் டரில் மிச்செல். ஆனால் அதற்கடுத்த ஓவரிலேயே ஹேசில்வுட்டிடம் வீழ்ந்தார் டரில்.
அதன்பின் கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்டில் இருவராலும் பவர்பிளேவில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. ஆறு ஓவர்கள் முடிவில் 32 ரன்களை எடுத்திருந்தது நியூசிலாந்து. அதன்பின்னர் மிச்செல் மார்ஷ் ஓவர் ஒன்றில் அடுத்தடுத்து இரு பந்துகளை பௌண்டரிக்கு அனுப்பியதை தவிர, நியூசிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய ஃபீல்டர்களுக்கு பெரிய வேலை வைக்கவில்லை.
நியூசிலாந்து பேட்டிங்கின் முதல் பாதி முடிந்தது. அதாவது 10 ஓவர்களில் அந்த அணி எடுத்திருந்த ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு 57. அதாவது ஓவருக்கு சராசரி ரன்ரேட் என்பது ஆறுக்கும் கீழே இருந்தது.
11-வது ஓவரை வீச துல்லியமான பந்துவீச்சால் ஸ்டம்புகளை பெயர்த்து எடுப்பதற்கு பெயர் பெற்ற மிச்செல் ஸ்டார்க்கை அழைத்தார் ஃபின்ச். அந்த ஓவரில் ஹாட்ரிக் பௌண்டரி விளாசி வில்லியம்சன் அசத்தினார். ஒரே ஓவரில் 19 ரன்கள் வந்தது. அந்த ஓவர், நியூசிலாந்து அணியின் ரன்ரேட்டை முடுக்கிவிட ஒரு பொறியாக அமைந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நியூசிலாந்து வீரர்களுக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 12-வது ஓவரின் முதல் பந்திலேயே மார்டின் கப்டில் வீழ்ந்தார்.
கப்டில் 35 பந்துகளை சந்தித்திருந்தாலும் அவர் எடுத்தது 28 ரன்கள்தான். கப்டில் பெவிலியனை நோக்கி நடக்கத் தொடங்கியபோது வில்லியம்சனுடன் இணைய கிளென் ஃபிலிப்ஸ் களத்தில் நுழைந்தார்.
ஆஸ்திரேலிய அணி நான்கு பௌலர்களுடன் ஆல்ரவுண்டர்களை நம்பி களமிறங்கி இருந்தது. ஐந்தாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரின் பணியைச் செய்ய வந்த ஆல்ரவுண்டர்களை இலக்கு வைத்து தண்டித்தார் வில்லியம்சன்.
மார்ஷ் வீசிய 9வது ஓவரில் அடுத்தடுத்து இரு பௌண்டரி விளாசியவர், மேக்ஸ்வெல் வீசிய 13வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் வைத்து அசத்தினார். மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு விரட்டியபோது அரைசதத்தை நிறைவு செய்தார் கேன் வில்லியம்சன்.
14வது ஓவரில் நூறு ரன்களை கடந்தது நியூசிலாந்து. 15வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவின் பந்துகளில் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் வைத்து நேர்த்தியாக ஆடினார் கிளென் ஃபிலிப்ஸ்.
15 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்திருந்தது நியூசிலாந்து அணி. கைவசம் எட்டு விக்கெட்டுகள் வைத்திருந்தது. அப்போது மீண்டும் ஸ்டார்கை அழைத்தார் ஃபின்ச். ஆனால், அந்த ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்துகளை புரட்டி எடுத்தார் வில்லியம்சன்.
நியூசிலாந்து அணித்தலைவரை சமாளிக்க ஃபீல்டிங்கை மாற்றி மாற்றி அமைத்துப் பார்த்தார் ஃபின்ச். ஆனால் வில்லியம்சனை எதுவும் செய்ய முடியவில்லை. அந்த ஓவர் கேன் வில்லியம்சனுக்கானதாக அமைந்தது.
அந்த ஓவரில் மட்டும் நான்கு பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி 22 ரன்கள் குவித்து மிரட்டல் ஆட்டம் ஆடினார் கேன் வில்லியம்சன். நியூசிலாந்தின் ஸ்கோர் 16-வது ஓவரில் 136 ரன்களுக்கு பாய்ந்தது. ஸ்டார்க் மூன்று ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்த விரக்தியுடன் காணப்பட்டார்.
17வது ஓவரை கவனமாய் வீசி, பௌண்டரி, சிக்ஸர் எதுவும் கொடுக்காமல் முடித்தார் கம்மின்ஸ்.
18-வது ஓவரை வீச ஹேசில்வுட் வந்தார். அவரது ஓவரில் ரன்குவிப்பை அதிகரிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தது மட்டுமின்றி, தமது விக்கெட்டையும் களத்தில் இருந்த இரு பேட்ஸ்மேன்களும் பறிகொடுத்தார்கள். ஃபிலிப்ஸ் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து நடையை கட்ட, வில்லியம்சன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார்.
கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் 48 பந்துகளில் 10 பௌண்டரி, மூன்று சிக்ஸர் என 85 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி இரு ஓவர்களில் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களால் பெரிய ஷாட்கள் விளையாட முடியவில்லை. ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டது. அதே சமயம் அவர்கள் விக்கெட்டுகளையும் இழக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே எடுத்தது நியூசிலாந்து.
20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. உலகக்கோப்பை டி20 வரலாற்றில் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான்.
ஆனால் துபாய் மண்ணில் இந்த ரன்கள் எல்லாம் ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த போதுமானதாய் அமையவில்லை.
முதல் ஓவரில் டிரென்ட் போல்ட்டிடம் தப்பித்தாலும், அவரது அடுத்த ஓவரிலேயே சிக்கினார் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் ஃபின்ச்.
ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சில் எப்படி நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை தவிர வேறுயாரும் குடைச்சல் கொடுக்கவில்லையோ, அதேபோல ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கின்போதும் டிரென்ட் போல்ட்டை தவிர வேறுயாரும் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தவில்லை.
இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், நிதானமாக அதே சமயம் நேர்த்தியாக, ரன்ரேட் மீதும் ஒரு கண் வைத்து விளையாடினார்கள். பவர்பிளே முடிவில் 43 ரன்கள் எடுத்திருத்தது ஆஸி.
நியூசிலாந்திடம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் சிக்கியது போல, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் நியூசிலாந்தின் நட்சத்திர பந்துவீச்சாளர் இஷ் சோதி மாட்டினார். அவரது ஓவரை வார்னர், மார்ஷ் இருவரும் பிளந்து கட்டினர்.
வார்னர் தனது விக்கெட்டை போல்டிடம் இழந்தாலும், தடுமாற்றமின்றி அபாரமாக ஆடினார் மிச்செல் மார்ஷ். அவருக்கு மேக்ஸ்வெல் பக்கபலமாக இருந்தார்.
சௌத்தி வீசிய 19வது ஓவரின் ஐந்தாவது பந்து மேக்ஸ்வெல் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய, பந்து பௌண்டரியை தொட்டதும் ஆஸ்திரேலியாவின் டி20 உலகக்கோப்பை தாகம் தணிந்தது.
கண்கள் விரிய ஓடிச்சென்று மிச்செல் மார்ஷ், தன்னை நோக்கி ஓடிவந்த ஸ்டாய்னிசையும், ஜாம்பாவையும் கட்டிக்கொள்ள, பெவிலியனில் வார்னர் ஆர்ப்பரித்தார்.
ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடத்திலேயே இல்லாத, பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பில் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படாத
ஆஸ்திரேலியா, இப்போது டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டது.
ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனிலேயே புறக்கணிக்கப்பட்டவர், பின்னர் திடீரென இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறக்கப்பட்ட மிச்செல் மார்ஷ், 2021 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் நாயகன் ஆனார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 12 மாதம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு, சமீபத்தில் ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின், அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டு, ஒருகட்டத்தில் அந்த அணியின் பிளெயிங் லெவனில் இருந்தே ஓரம்கட்டப்பட்ட டேவிட் வார்னர், பேட்டிங் ஃபார்மையும் இழந்து தவித்தார்.
உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் சரியாக விளையாடாததால் ஆஸ்திரேலிய அணியில் பிளேயிங் லெவனில் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கே விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஆனால், அவர் 2021 டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடரில் ஏழு போட்டிகளில் மூன்று அரை சதம் உள்பட 289 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார் டேவிட் வார்னர்.
2009 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2015 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டி, 2021 டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டி என மூன்று ஐசிசி தொடர் இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது நியூசிலாந்து.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவை வீழ்த்தி முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து. ஆனால் ஐசிசி உலகக்கோப்பையை வசப்படுத்தும் முயற்சி இந்தமுறையும் பிளாக் கேப்சுக்கு கைகூடவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை நடந்து முடிந்திருக்கிறது. நீண்ட பயணத்துக்கு பிறகு முதல் டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. ஆனால் அடுத்த ஆண்டே எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அது ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
THX-BBC