தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த மருத்துவமனையில் சிகிச்சை வழங்க போதிய வசதியில்லாததால் முதலில் அவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்த காவல்துறையினர் பிறகு அவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்து வருதவாக தகவல்கள் வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் திருட்டு குற்றச்சாட்டில் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவரான சக்திவேல் (29) என்பவர் உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பிபிசி சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சக்திவேலுக்கு இன்று மாலை நெஞ்சு வலிப்பதாகச் சொன்னார். உடனே அவரை உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தோம். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் தெரிவித்தோம். அவர்கள் வந்த பிறகு சக்திவேல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் போதுமான உபகரணங்கள் இல்லாத நிலையில், அவரை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு மாற்றும்படி மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர் கள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டு வருகிறார்,” என்று தெரிவித்தனர்.
முன்னதாக, சக்திவேலின் குடும்பத்தினருக்கும் இது தொடர்பாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெண்ணிலா (தர்மராஜின் மனைவி) “நெஞ்சு வலியால ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொல்லியருக்கிறார்கள். ரொம்ப சீரியஸானா சொல்றோம். அப்ப வந்தா போதும், இல்லாட்டி வர வேணாம்னு சொன்னாங்க. ஆனா நாங்க புறப்பட்டுக்கிட்டிருக்கோம்” என்று தெரிவித்தார்.
சக்திவேலின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரைச் சேர்ந்த குறவர் இனத்தைச் சேர்ந்த பிரகாஷ், தர்மராஜ், செல்வம் ஆகிய மூன்று பேர் ஞாயிற்றுக் கிழமையன்று சீருடை அணியாத காவலர்கள் சிலரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பிறகு அடுத்த நாள் சக்திவேல், பரமசிவம் என்ற மேலும் இரண்டு பேர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் பரமசிவம், செல்வம் ஆகிய இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகியோ மூவரும் செவ்வாய்க்கிழமை மதியம் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இவர்களில் பிரகாஷ், தர்மராஜ் ஆகிய இருவரும் நேற்று முதலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் இரவில் சக்திவேல் தனியாக நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் உளுந்தூர்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதான நிலையில், அவர்கள் போலீஸ் விசாரணையில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த விவகாரம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மறுபடியும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருட்டுக் குற்றங்களில் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் கடந்த வார இறுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மூன்று பேர் தற்போது கைதாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் மனைவியான புவனேஸ்வரி தனது கணவரும் வேறு இரண்டு பேரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதன் பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்த அவர், அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 14ஆம் தேதி இரவு சுமார் சுமார் 11.45 மணியளவில், தனது கணவர் பிரகாஷ் (25), அவரது உறவினரான தர்மராஜ் (35), செல்வம் (55) ஆகியோர் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, சீருடை அணியாத காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து வேனில் இழுத்துச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார்.
அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், திங்கட்கிழமையன்று சின்னசேலம் காவல் நிலையத்திற்குச் சென்று புவனேஸ்வரி விசாரித்தபோது அவர்கள் அங்கில்லை என்பதும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இதனிடையே மீண்டும் ஊருக்குள் வந்த காவல் துறையினர் புவனேஸ்வரி – பிரகாஷ் தம்பதியின் உறவினர்களான பரமசிவம் (42), சக்திவேல் (29) ஆகிய மேலும் இருவரையும் வேனில் அழைத்துச் சென்றதாக புவனேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.
THX-BBC