திருச்சியில் ஆடு திருடர்கள் என கருதப்படும் சிலரால் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாக 10 வயது சிறார் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறியது:
திருச்சி மாவட்டம் திருவரம்பூருக்கு உட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுட்டிருந்தார். அப்போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அவர் அடையாளம் தெரியாத மூன்று பேர் ஆடுகளை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்தபோது சந்தேகத்தின்பேரில் அவர்களை நிறுத்த முயன்றார்.
ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால் பூமிநாதனும் தமது இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார். கீரனூர் பள்ளத்துப்பட்டி மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரும் இருந்த வாகனத்தை மறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர்களில் 19 வயது மணிகண்டன் என்பவர் தன்னுடன் இருந்த இரு சிறார்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை வெட்டிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆடு திருடிய சம்பவம் குறித்து மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அவர்கள் பிடிபட்ட இடத்துக்கு வந்தபோது பூமிநாதன் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் கீரனூர் காவல்நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் தேடுதல் நடவடிக்கையில், மணிகண்டன், இரண்டு சிறார்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிடிபட்ட மூன்று நபரில் ஒருவர் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர் என்பதும் மற்றொருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் மணிகண்டன் (19) என்பதும் அவர் மீது காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களில் மைனர் குற்றவாளிகளே அதிக அளவில் இடம் பெறுகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக சமீபத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நபர்கள் பாதிக்கு பாதி மைனர் குற்றவாளிகள் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு வருங்கால சமுதாயத்தையே குற்றப் பின்னணி கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு என்ன காரணம், இதன் மூலம் யார் பயன் அடைகிறார்? மைனர் குற்றவாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான பின்னணி என்ன, அதை தடுத்து நிறுத்துவதற்கு என்ன வழி என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
மேலும் மைனர் குற்றவாளிகளை கூலிப்படைகளாகவும் ரவுடிகளாகவும் மாற்றுவது யார் அதை கொண்டு பயனடைவது யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
திருச்சியில் திருடர்களை விரட்டிப் பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
THX-BBC