“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி ஒன்றை கொண்டு வருவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் எனக்கூறிய ஞானசார தேரரை(Gnanasara Thero) ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள்.
இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்(Rizard Bathiudeen) சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே தனியார் சட்டங்களில் சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம் ,மதம், கலாசாரம் தொடர்பில் உள்ளன. அதேபோன்று தேச வழமை சட்டம், கண்டிய சட்டம் போன்றவையும் உள்ளன.
இவற்றை இல்லாதொழித்து “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி ஒன்றை கொண்டு வருவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் எனக்கூறிய ஞானசார தேரரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 9 வருட காலம் அரச தலைவராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவின்(Mahinda Rajabaksha) அதிகாரங்களை அவர் பிரதமராக இருக்கும் இந்த இரண்டு வருட ஆட்சியில் பலவந்தமாக பிடுங்கி எடுத்துவிட்டீர்கள் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி அவர் எத்தனையோ புரட்சிகளை செய்தார். அவருடன் நாம் பக்கபலமாக இருந்து செயற்பட்டோம். ஆனால் இந்த இரண்டு வருட ஆட்சியில் சண்டித்தனமாக எமது உரிமைகளை பறிக்கின்றீர்கள் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை , இந்த உலகில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட 200 கோடி முஸ்லிம் மக்கள் உள்ளனர். அல்லாஹ்வை வஞ்சிப்பதை அல்லாஹ்வை ஏசுவதனை ஏற்றுக்கொள்ளாத 54 முஸ்லிம் நாடுகள் உள்ளன.
அவ்வாறிருக்கையில் ”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ்” எனக்கூறிய ஒரு குற்றவாளியை முன்னாள் அரச தலைவரின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை செயலணியின் தலைவராக நியமித்ததன் நோக்கம் என்ன? அல்லாஹ்வை கேவலப்படுத்திய ஒருவரை நியமிப்பதன் மூலம் நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?
இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களை மிரட்டலாம் என்று நினைக்கின்றீர்களா? இந்த நியமனத்தால் சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? சிங்களவர்கள் கூட இந்த நியமனத்தை ஏற்கவில்லை.
நான் சிறையில் இருந்தபோது எனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளைக் கூட இந்த சபையில் ஒரு இனத்தின் மக்கள் தலைவனாக கூறுவதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை. எனது குரலை அடக்கினீர்கள். இவ்வாறான செயல்கள் மூலம் உங்களால் இந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்க முடியாது என்பதனை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
IBC