காபூலில் உள்ள முக்கிய ராணுவ மருத்துவமனை மீது கடந்த செவ்வாய்கிழமை நடந்த தாக்குதல் தாலிபன்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தை குறைத்துக்காட்ட தாலிபன் முயன்றது. இருப்பினும் இந்த தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் தாலிபனின் மூத்த அதிகாரியான மௌல்வி ஹம்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹம்துல்லா, காபூல் ராணுவப் படையின் தளபதியாக இருந்தார். அவரது மரணம் குறித்த பேச்சு உண்மை என நிரூபணமானால், தாலிபன்கள் பதிலடி கொடுப்பதும், நாட்டில் புதிதாக வன்முறை வெறியாட்டம் தொடங்குவதும் ஏறக்குறைய உறுதி.
இதே மருத்துவமனை மீது 2017ஆம் ஆண்டும் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் ஐஎஸ் குழு தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பகுதியில் செயல்படும், கொராசானை தளமாகக் கொண்ட ஐஎஸ், செப்டம்பர் 18 அன்று, தாலிபன்களை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் தாலிபன்கள் அதிக அளவில் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஷியா சிறுபான்மையினரும் இலக்காகின்றனர்.தாலிபன்கள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அவர்கள் இதில் வெற்றிபெறவில்லை.
சமீப நாட்களாக தாலிபன்கள் ஐஎஸ் அமைப்பின் இருப்பை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். தாலிபன்கள் அவர்களின் வலுவை குறைத்துக்காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் தாலிபன்களின் வலுக்கோட்டைகளிலும் ஐஎஸ் தாக்குதல் நடத்த முடியும் என்பதை காபூல் மருத்துவமனை மீதான தாக்குதல் சுட்டிக்காட்டுகிறது.
நவம்பர் 2ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு ஐஎஸ் அமைப்பு, தாலிபன்களை குறிவைத்ததாகக் கூறியது. இந்த மருத்துவமனை எதிரிகளுக்கு சொந்தமானது என்றும், கொல்லப்பட்டவர்கள் தாலிபனைச்சேர்ந்தவர்கள்,சாதாரண மக்கள் அல்ல என்றும் ஐஎஸ் கூறியுள்ளது. தாலிபன் பாதுகாப்புத் தலைவர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாலிபன் அரசின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் அக்டோபர் 27 அன்று மருத்துவமனைக்குச் சென்றதை, ஐஎஸ் குறிப்பிடுகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. யாகூப், தாலிபன் நிறுவகர் முல்லா உமரின் மகன் ஆவார். அவர் பொதுவெளியில் காணப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
மறுபுறம், இந்த தாக்குதலை பொதுமக்கள் மீதான தாக்குதல் என்று தாலிபன் விவரித்துள்ளது. இதில் மிகக் குறைந்த சேதமே ஏற்பட்டதாகவும், அது கூறிக்கொள்கிறது.
நாட்டில் உள்ள பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை ஐஎஸ் குறிவைப்பதாக, நவம்பர் 2 தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் ட்வீட்டில், தாலிபன் கூறியது. இந்த தாக்குதலில் மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் தாலிபன் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அது தெரிவித்தது.
இது ஒரு தீவிரமான தாக்குதல் என்று வர்ணித்த ஐஎஸ், இதில் தற்கொலை குண்டுவெடிப்பாளர், வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் மற்றும் பிற நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. தாலிபன்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தகர்த்து இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
தாலிபன் உயர் அதிகாரிகள் உட்பட டஜன் கணக்கான தாலிபன் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று ஐஎஸ் கூறியுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் பிரஸ் செய்தி முகமை (ஏஐபி), தாலிபனின் காபூல் ராணுவ முகாம் மற்றும் தாலிபன் சிறப்புப் படையின் தளபதி மௌல்வி ஹம்துல்லா இந்தத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக, பெயர் குறிப்பிடாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி, தெரிவித்துள்ளது. ஹம்துல்லாவின் மரணத்தை தாலிபன்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தாலிபன் தொடர்புடைய ஒரு ட்விட்டர் கணக்கு அதைப்பற்றி குறிப்பிடுகிறது.
தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக, உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலின் தாக்கத்தை குறைத்துக்க்காட்ட தாலிபன்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்தத்தாக்குதலை தனது பாதுகாப்பு படையினர் முறியடித்ததாக அது கூறுகிறது. மருத்துவமனையை அடைவதற்கு முன்பே தாக்குதல் நடத்தியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தாலிபன் தெரிவிக்கிறது.
15 நிமிடங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தாலிபன்கள் கூறியுள்ளனர். அதே சமயம், தனது படையினர் இறுதிவரை போராடி மருத்துவமனைக்குள் நுழைந்ததாக ஐஎஸ் கூறுகிறது.
தங்கள் போராளிகள் ஆயுதங்களுடன் தயார்நிலையில் இருந்ததாகவும், விமானப்படையும் இந்த பணியில் ஈடுபட்டதாகவும் தாலிபன் கூறுகிறது.
சம்பவ இடத்தில் ஹெலிகாப்டர்கள் அதிகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை, ஏனெனில் அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் முறியடிக்கப்பட்டுவிட்டனர் என்றும் தாலிபன்கள் தெரிவித்தனர். தாலிபன்கள் காணொளி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர். அதில் நிலைமை அமைதியாக இருப்பதாக காணப்படுகிறது.
தாலிபன் ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கத்தில் சமீபத்திய தாக்குதல்கள் அமைந்துள்ளன. இந்த நடவடிக்கை செப்டம்பர் 18 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் காபூல் விமான நிலையமும் ஐஎஸ் அமைப்பால் தாக்கப்பட்டது. ஆனால் தாலிபன்கள் தங்களது இலக்கு அல்ல என்று அப்போது கூறப்பட்டது.
செப்டம்பர் 18 முதல் நவம்பர் 2 வரை, 68 தாக்குதல்களை நடத்தியதாக, ஐஎஸ் கொராசான் மாகாண பிரிவு கூறியது. ஆப்கானிஸ்தானில் 59 தாக்குதல்களும், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் 9 தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
வடக்கு நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில் பெரும்பாலான தாக்குதல்கள் நடந்தன. அங்கு 41 தாக்குதல்கள் நிகழ்ந்தன. காபூலில் ஏழு தாக்குதல்களையும், குனாரில் ஆறு, பர்வானில் மூன்று, குண்டூஸ் மற்றும் கந்தஹாரில் தலா ஒரு தாக்குதலையும் நடத்தியதாக ஐஎஸ் கூறியது. கந்தஹார் தாலிபன்களின் வலுக்கோட்டை என்று கருதப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் பெரும்பாலானவை அதாவது 53, நேரடியாக தாலிபன் உறுப்பினர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டவை. இவர்களில் இரண்டு போராளிகளின் தலை துண்டிக்கப்பட்டது. மேலும், எரிபொருள் லாரிகள், மருத்துவமனைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவையும் குறிவைக்கப்பட்டன.
இந்த தாக்குதல்களில் பல அதிகாரிகள் உட்பட குறைந்தது 86 தாலிபன் உறுப்பினர்களைக் கொன்றதாக ஐஎஸ் கூறியது.
அக்டோபர் 3 ஆம் தேதி தனது புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தாலிபன் அல்-ஃபத்தாவை, ஐஎஸ் குறிவைத்தது. இதில் முதன்முறையாக தாலிபன்களுக்கு எதிராக தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன்பிறகு அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 15 அன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா மசூதிகள் மீது பெரிய தாக்குதல்கள் நடந்தன. அந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். இரண்டாவது தாக்குதல் கந்தஹாரில் நடத்தப்பட்டது. தாலிபன்களின் ஆன்மீகத் தலைநகர் மீது ஐஎஸ் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை.
தாலிபன்கள் மீதான தாக்குதலுக்கு பிற ஜிஹாதி குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஷியா சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தவறானவை என்றும் அவை கூறின.தாலிபன் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் எதிரி ஏஜென்சிகளின் கைகளில் பகடையாக ஐஎஸ் செயல்படுகிறது என்று இந்த குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆகஸ்ட் 19 ஆம் தேதி தனது முதல் அறிக்கையை வெளியிட்ட ஐஎஸ், தனது போராளிகள் ஆப்கானிஸ்தானில் ஜிஹாத்தின் புதிய கட்டத்திற்கு தயாராகி வருவதாக எச்சரித்தது. தற்போதைய தாக்குதல்கள் அதன் ஒரு பகுதி போலவே தெரிகிறது.
தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் ஐஎஸ் கோபமடைந்துள்ளது. தாலிபன்கள் அமெரிக்காவுடன் இணைந்து, உண்மையான ஜிஹாதிகளை அப்பகுதியில் இருந்து விரட்ட முயற்சிப்பதாக அது குற்றம் சாட்டியது. நாட்டில் தனது செயல்பாடுகளைத்தொடர அந்த அமைப்பு உறுதிபூண்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு தாலிபன், சர்வதேச சமூகம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சமய சிறுபான்மையினருக்கு ஆக்கபூர்வமான செய்தியை அனுப்ப முயற்சித்து வருகிறது. இது ஐஎஸ் அமைப்பின் பெயருக்கு ஊறுவிளைவிக்கும்.
தாலிபன்கள் இதற்கு பதிலடியும் கொடுத்தனர். நங்கர்ஹர், காபூல் மற்றும் பிற மாகாணங்களில் ஐஎஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.
தாலிபன் செய்தித் தொடர்பாளரும், தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சருமான ஜபிஹுல்லா முஜாஹித் , அக்டோபர் 7 ஆம் தேதி பேசுகையில், ஐஎஸ் அமைப்பை, தலைவலியுடன் ஒப்பிட்டார். ஐஎஸ் அமைப்பிற்கு அடிமட்டநிலையில் ஆதரவு இல்லை என்றும் விரைவில் அது அழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் அரசின் முன்னாள் அதிகாரிகள் ஐஎஸ் உடன் இணைந்தனர் என்ற குற்றச்சாட்டை நவம்பர் 2 ஆம் தேதி பேசுகையில் அவர் மறுத்தார்.
தாலிபன் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரீமி, ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் இல்லவே இல்லை என்று சுதந்திர ஆப்கானிஸ்தான் செய்தித்தாள் ‘ஹஷ்ட் சோப்’ இடம் தெரிவித்தார்.
ஆனால் தாலிபன்களின் அறிக்கைகள் மற்றும் ஐஎஸ் ஐ ஒடுக்குவதற்கான அதன் முயற்சிகள் இருந்தபோதிலும், அக்குழு சிறிய மற்றும் பெரிய அளவிலான தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இது தொடர்ந்தால், சர்வதேச சமூகத்திடம் திறமையான நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் தாலிபன் ஆட்சியின் பிம்பம் பாதிக்கப்படும். மறுபுறம், யாருடைய பாதுகாப்பிற்காக தான் போராடுவதாக தாலிபன் கூறுகிறதோ, அந்த உள்ளூர் மக்களின் பார்வையிலும் தாலிபனின் நிலை பலவீனமாகத் தெரியும்.